வெந்து தணிந்தது காடு படத்தில் பிரபல மலையாள நடிகர் சித்திக் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். ஏற்கனவே சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் வெந்து தணிந்தது காடு படத்தில் இளம் நடிகை கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் .
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் மலையாள நடிகர் சித்திக் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சித்திக் திரிஷ்யம், ஒடியன், ஹே ஜூடு போன்ற மலையாள படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.