தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கொடைக்கானல் ஏரி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
தேர்தல் முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், தலைவர்கள் மற்றும் பல தரப்பினரும் கொடைக்கானலில் நிலவிவரும் குளு, குளு சீசனை அனுபவிக்க அங்கு குவிந்துள்ளனர். அதன்படி கொடைக்கானலுக்கு கடந்த 15-ஆம் தேதி தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு தனது குடும்பத்தினருடன் வந்தார். கொடைக்கானலில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இதையடுத்து கடந்த 16-ம் தேதி மன்னவனூர் மற்றும் பூம்பாறை பகுதிகளுக்கு சென்று சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தார்.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் ஏரிச்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் அடையாளம் காணமுடியாதபடி பேண்ட், டி-சர்ட் அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் சென்றிருந்தார். அப்போது அவரை பலருக்கும் அடையாளம் தெரியவில்லை. இருப்பினும் அருகில் இருந்த சிலர் அவருக்கு வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்து கொண்டனர்.