கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இந்நிலையில் சென்னையில் 60 வயது மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, சென்னையில் இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இல்லம் தேடி சென்று பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அவசியம் உடையவர்கள் 1913, 044 2538 4520, 4612 2300 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.]