சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மிகவும் தொன்மை வாய்ந்த கட்டிடமாகும். இங்கு தினம்தோறும் 120 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 442 புறநகர் ரயில்கள் என 562 ரயில்கள் கையாளப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற ஐந்து ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன்படி ரூ.734.91 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு மணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பணிகளை மேற்கொள்ள ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இறுதி ஒப்பந்தத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெருகிவரும் போக்குவரத்து தேவைகளுக்கு தகுந்தாற்போல் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த கட்டுமானம் அமையும். இந்த பணிகள் அனைத்தும் உலக தரத்தில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது மறு சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. மரங்கள் மற்றும் பயன்பாட்டு பகுதி கட்டுமானத்திற்கான நிலப்பரப்பு கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய கட்டிடம், பார்சல் அலுவலகம், நடைமேடை, மேம்பாலம், காத்திருப்பு அரங்கு, அடுக்குமாடி வாகன காப்பகம் அமைய உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிகள் 3 வருடங்களில் நிறைவடையும் என அதில் கூறப்பட்டுள்ளது.