சென்னை ஐ.ஐ.டி குழுவினர் கடல் அலையில் இருந்து ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது “சிந்துஜா 1” என அழைக்கப்படும் இந்த கருவி தூத்துக்குடி கடலில் உள்ளே 6 கிலோமீட்டர் தொலைவில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கருவியானது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும். மேலும் அடுத்த 3 வருடங்களில் கடல் அலையில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் விதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் இந்த கருவிக்கான பரிசோதனை கடலில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
இது ஐ.நா மற்றும் இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கு உதவியாக இருக்கும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாக 2030-ல் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தியாவின் பருவநிலை மாற்ற இலக்குகளை எட்ட உதவும். இது குறித்து ஐ.ஐ.டி கடல்சார் பொறியியல் துறை பேராசிரியர் அப்துல் சமது கூறியதாவது, “ஒரு மிதக்கும் கருவியான “சிந்துஜா1 “அமைப்பில் ஒரு ஸ்பார் மற்றும் ஒரு மின் தொகுதி உள்ளது. இது கடல் அலைகள் மேலும் கீழும் ஊசலாடும்போது கருவி மேலும் கீழுமாக நகர்கிறது.
இந்த கருவியின் மையத்தில் ஒரு துளை அமைந்துள்ளது. அதில் ஒரு ஸ்பேர் பொருத்தப்பட்டிருக்கும். இதில் அலை அடிக்கும் போது கருவி நகரும் ஆனால் அதன் உள்ளே அமைந்துள்ள ஸ்பேர் நகராது. இது அலைகள் இரண்டுக்கும் இடையே ஒரு ஒப்பீட்டு இயக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த சார்பு இயக்கம் மின்சார ஜெனரேட்டர்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இந்த மின்சார ஜெனரேட்டர்களை சென்னை போன்ற பெருநகரங்களில் பயன்படுத்த முடியாது. ஆனால் தீவு கடலோரப் பகுதிகள் போன்ற தொலைதூர இடங்களில் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் அங்கு கடல் அலைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் செலவு குறைவு” என அவர் கூறியுள்ளார்.