சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு கேரள தேவஸ்வம்போர்டு மற்றும் பல்வேறு ஐயப்பா சேவா சங்கங்களின் சார்பாக அன்னதானம் கொடுக்கப்பட்டது. ஆனால் பக்தர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவை உறுதி செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால் கேரள அரசானது கடந்த வருடம் 22.55 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் சபரிமலை மாளிகைப்புரம் அருகில் ஒரே நேரத்தில் 1,800 பேர் உட்கார்ந்து சாப்பிடும் அதிநவீன அன்னதான மண்டபம் கட்டப்பட்டது. இது கடந்த 2020-ஆம் வருடம் டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மண்டபம் மூலமாக சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் சுடச்சுட உணவு சாப்பிட்டு வருகின்றனர். அதாவது தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரை காலை உணவாக உப்புமாவும், கடலை குழம்பும் வழங்கப்படுகிறது. மேலும் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை இரு வகையான கூட்டு, சாம்பார், பொரியல், ரசம், மோருடன் சாப்பாடு வழங்கப்படுகிறது. இதில் விருப்பப்படும் பக்தர்களுக்கு மதிய உணவு பார்சலாகவும் வழங்கப்படுகிறது.
அதன்பின் மாலை 6 மணி முதல் இரவு உணவு வழங்கப்படுகிறது. இவ்வாறு உணவாகவும் கஞ்சியாகவும் பயிறு வகைகளோடு நடை அடைப்பு பிறகும் வரும் பக்தர்கள் அனைவருக்கும் நேரம் பார்க்காமல் கட்டணமின்றி சுடச்சுட உணவு வழங்கி பக்தர்களின் பசியாற்றப்படுகிறது. தற்போது தினசரி பக்தர்களின் வருகை சராசரியாக 45,000 கடந்துள்ள நிலையில், மண்டல பூஜை முடிந்து மகரவிளக்கு பூஜை முடியும் வரையிலும் பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.