பல்வேறு தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் இருந்தாலும் சந்தையில் ஆவின் நிறுவனம் தயாரிக்கும் பாலுக்கு மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. மேலும் சென்னையில் 13.5 லட்சம் லிட்டர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 34 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பால் பவுடர், வெண்ணெய், பால் கோவா, நெய் உள்ளிட்ட தயாரிப்புகளை வாங்குவது என ஆவின் தயாரிப்புக்கு தனி கூட்டமே உள்ளது.
இருப்பினும் ஆவின் இனிப்பு வகைகள் உள்ளிட்டவற்றின் விலையை அதிகரித்துள்ளதால் ஏழை, எளிய மக்கள் இந்த பொருள்களை வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் இனிப்பு வகைகள் உள்ளிட்ட விற்பனையில் ஆவினால் மக்களை கவர முடியவில்லை. இந்த குறையை போக்குவதற்காக ஆவின் அனைத்து தரப்புகளையும் ஈர்க்க புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாம். அந்த திட்டத்தின்படி ஆவின் பலவகை புதிய குளிர்பானங்களை கோடைகாலத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குளிர்பானங்களை பெட்டி கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், கிராமப்புற மளிகை கடைகள் உள்ளிட்ட இடங்களிலும் வினியோகம் செய்து அதன் மூலம் சந்தை விற்பனையை விரிவுபடுத்த ஆவின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தற்போது எடை அதிகம் உள்ள பொருள்களின் எடையை குறைத்து மலிவான விலையில் அவற்றை விற்பனை செய்யவும் ஆவின் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.