மனைவியுடன் தனிஅறையில் 2 மணிநேரம் செலவிடுவதற்கு கைதிகளுக்கு அனுமதி வழங்கும் சலுகையினை நடைமுறைபடுத்த பஞ்சாப் அரசானது திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.
பஞ்சாப் சிறைத்துறையின் இம்முடிவு தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, பஞ்சாப் சிறைகளிலுள்ள கைதிகள் தங்களது மனைவி (அல்லது) கணவருடன் தனி அறையில் 2 மணிநேரம் செலவிட அனுமதி வழங்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. வருகிற 27ஆம் தேதி முதல் இது அமலுக்கு வர இருக்கிறது. நபா மாநகரிலுள்ள கோயிந்த் வால் மத்திய சிறை மற்றும் பத்திண்டா நகரில் உள்ள பெண்கள் சிறை ஆகிய 2 சிறைச்சாலைகளில் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொடூர குற்றங்களைப் புரிந்தவர்கள், ரவுடிகள், அபாயகரான கைதிகள், பாலியல் குற்றம் புரிந்தவர்கள் போன்றோருக்கு இச்சலுகை வழங்கப்படமாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலில் நீண்டகாலமாக உள்ள நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கே இந்த முன்னுரிமை வழங்கப்படும். அந்த வகையில் சிறை வளாகத்திலுள்ள குளியலறையுடன் கூடிய தனி அறையில் ஒரு கைதி தனது மனைவியுடன் 2 மணிநேரம் செலவிட அனுமதி வழங்கப்படும். இத்தகைய அனுமதியின் வாயிலாக சிறைக் கைதிகளிடம் நன்னடத்தை அதிகரிக்கும். மேலும் அவர்களது திருமண பந்தமும் வலுப்படும்.
இது போன்ற அனுமதி 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும். ஹெச்.ஐ.வி பாதிப்பில்லை, கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றுடன் வரும் மனைவி (அல்லது) கணவனுக்கு மட்டுமே சிறையிலுள்ள தங்களது இணையருடன் இருப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிறைக்கைதிகளுக்கு இத்தகைய ஒரு சலுகையை வழங்கும் முதல் மாநிலம் பஞ்சாப் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.