நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக இருளர் இன மாணவி மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சூலூர் வட்டம் அடுத்த தும்பிப்பட்டி கிராமத்தில் பாலன் – ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் ஸ்ரீமதி (20). இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்களது மகள் ஸ்ரீமதி கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் மருத்துவராகி மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவத்திற்கு படிக்க முயற்சி செய்து கோவையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வு பயிற்சி பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மருத்துவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவி ஸ்ரீமதிக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.
இது பற்றி மாணவி ஸ்ரீமதி பேசியதாவது, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில் 4 முறை நீட் தேர்வு எழுதினேன். அப்போது 2 முறை எனக்கு தனியார் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தது. ஆனால் அங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற காரணத்தினால் என்னால் சேர முடியவில்லை. இதனையடுத்து மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில் வேறு எந்த உயர்கல்வியிலும் சேராமல் 3 வருடங்கள் வரை காத்திருந்து தற்போது 4வது முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். தற்போது மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மருத்துவராகி பொது மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறேன். குழந்தைகள் மனநல மருத்துவராக முடிவு செய்து இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.