பக்பவுண்டி எனப்படும் பிழை வெகுமதிகள், ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் வழங்கும் முக்கியமான செயல்முறை ஆகும். அதிலும் குறிப்பாக ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் ஆகிய பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற செயல்பாடுகளை அவ்வப்போது தொடர்ச்சியாக செய்து வருகின்றன. அதன்படி இவற்றின் தளங்கள் (அல்லது) மென் பொருட்களில் ஏதாவது பிழைகள் இருந்து அதை கண்டுபிடிக்கும் நபர்களுக்குச் சிறந்த வெகுமதிகளைத் தந்து அவர்களை அங்கீகரிக்கும். அந்த அடைப்படையில் இப்போது கூகுள்நிறுவனம் ஒரு புது பக்பவுண்டி திட்டத்தை அறிவித்து இருக்கிறது.
இதற்கிடையில் சமீபத்திய பக்பவுண்டி புரோகிராம் எதை பற்றியது என ஆராய்வதற்குள், பக் பவுண்டி புரோகிராம்கள் குறித்து தெரிந்துகொள்வோம். பக்பவுண்டி என்பது செயலிகள், சேவைகள் (அல்லது) இயக்க முறைமைகளிலுள்ள பிழைகள் (அல்லது) பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிவதற்காகப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் (அல்லது) நெறிமுறை ஹேக்கர்களுக்கு வழங்கப்படும் பண வெகுமதியாகும். எந்த ஒரு மென்பொருளும் அல்லது செயலியும் வெளியிடப்படுவதற்கு முன்பு தவறவிட்ட சில பிழைகளைக் கண்டறிய இந்த வழிமுறை பல்வேறு நிறுவனங்களுக்கு உதவுகிறது.
கூகுளின் புது வெகுமதி
கூகுளின் ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் பாதிப்பு வெகுமதிகள் திட்டத்தை (OSS VRP) துவங்குவதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கூகுளின் திறந்த மூல திட்டங்களிலுள்ள பாதிப்புகளைக் கண்டுபிடிக்க வெகுமதிகளை வழங்குகிறது. பாதிப்பு வெகுமதி திட்டங்களில் (VRPs) கூகுளின் OSS VRP-ஐச் சேர்ப்பதன் வாயிலாக முழு திறந்த மூல சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முடியும். அத்துடன் பாதிக்கக்கூடிய பிழைகளைக் கண்டறிவதற்காக ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த செயல்முறை வெகுமதிகளையும் வழங்குகிறது என கூகுள் தன் வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது. இந்த பக்பவுண்டி திட்டம் Fuchsia, Golang மற்றும் Angular ஆகிய திறந்த மூலதிட்டங்களுக்கானது எனவும் குறிப்பிட்டுள்ளது.
கூகுள் செலுத்தும்தொகை
பிழைகளின் தீவிரம் மற்றும் திட்டத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்து வெகுமதிகள் $100 (சராசரியாக ரூபாய். 8,000) முதல் $31,337 (சராசரியாக ரூ. 25 லட்சம்) வரை இருக்கும். இவற்றில் அளிக்கப்படும் பெரிய தொகைகள் என்பது வழக்கத்துக்கு மாறான, சுவாரஸ்யமான பிழைகளுக்கு வழங்கப்படும். ஆகவே இதன் வாயிலாக ஒருவரின் படைப்பாற்றலும் ஊக்குவிக்கப்படுகிறது” என கூகுள் நிறுவனமானது தெரிவித்துள்ளது.
முன்பு கொடுத்த வெகுமதி என்ன?
கூகுள் அதன் தற்போதைய பக்பவுண்டி திட்டங்கள் வாயிலாக 84-க்கும் அதிகமான நாடுகளிலுள்ள பிழை கண்டுபிடிப்பாளர்களுக்கு (பக் ஹண்ட்டர்ஸ்) வெகுமதிகளை வழங்கியுள்ளது. இதுவரையிலும் ஒட்டு மொத்தமாக இத்திட்டங்கள் வாயிலாக 13,000-க்கும் அதிகமான சமர்ப்பிப்புகளுக்கு வெகுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி இதன் மொத்த வெகுமதி தொகை என்பது $38 மில்லியன் எனக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால் தொழில்நுட்பத்தில் ஆர்வம் இருப்பவர்கள் கூகுளினுடைய இந்த வாய்ப்பபினை பயன்படுத்தி வெகுமதிகளைப் பெற முயற்சி செய்யலாம்.