மக்கும் குப்பைகளை வைத்து மின்சாரம் தயாரித்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் அசத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் வரும் சுற்றுலா பயணிகள் கடைகளில் இருந்து தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சேகரிக்கின்றனர் .
அதன்பின்னர் மக்காத குப்பைகளை சேகரிக்க அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் மக்கும் குப்பைகள் இருதயபுரத்தில் அமைந்துள்ள ஒரு ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மக்கக்கூடிய குப்பைகளான உணவு, காய்கறிகள், பழ வகைகள், இறைச்சி ஆகியவற்றை இயந்திரங்கள் மூலம் அரைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு உரமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த குப்பைகளை அரைப்பதற்கு 1 கிலோ குப்பைக்கு 1 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம் என்று நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து தினமும் நகராட்சி அதிகாரிகள் மக்கும் குப்பைகள் மூலம் 100 முதல் 150 யூனிட் வரை மின்சாரம் தயார் செய்து அசத்துகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் நாராயணன் கூறியதாவது. மக்கும் குப்பைகளை அரைத்தவுடன் தண்ணீர் மற்றும் திரவம் வெளியேறுகிறது. இந்த திரவம் இயற்கை உரமாக விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். அதேபோல் குப்பைகள் அரைத்தவுடன் வெளியேறும் வாய்வுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் மூலம் 50 வாட்ஸ் பல்புகளை 10 மணி நேரம் எரிய வைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.