கோவா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பல்வேறு கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.
தேர்தல் வாக்குறுதியில் முக்கிய அம்சமாக அவர் கூறியதாவது, வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்பின் நாங்கள் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் நில உரிமையை வழங்குவோம். டெல்லியைப் போலவே, கோவாவின் ஒவ்வொரு கிராமம் மற்றும் மாவட்டத்திலும் சிறந்த மற்றும் இலவச சுகாதாரத்திற்காக மொஹல்லா கிளினிக்குகள், மருத்துவமனைகள் திறக்கப்படும். விவசாயிகளுடன் கலந்துரையாடிய பின் விவசாய பிரச்சினைகள் தீர்க்கப்படும். மேலும் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், கோவா மக்களுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம், தண்ணீர் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஏழை, பணக்காரன் என எந்த வித்தியாசமும் இன்றி அனைத்து அரசு பள்ளிகளிலும் இலவச கல்வி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.