புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 13 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட இருக்கிறது. இதற்காக ரூபாய் 37 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை அமைச்சர் கே.என் நேரு ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது பேருந்து நிலையத்தில் அமைக்கப்படும் கடைகள், பேருந்துகள் நிறுத்தும் இடம் மற்றும் கழிவறைகள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முதல்வர் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகிற தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையம் குறித்தும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, நிலம் குறித்த அனைத்து விவரங்களையும் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தப் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் 6 மாதத்திற்குள் தொடங்கப்படும். இந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் அதற்கான முழு பணத்தையும் செலுத்தி விட்டதாகவும், நகராட்சி மற்றும் பேரூராட்சி களின் தரம் உயர்த்தப்பட மாட்டாது எனவும், பொதுமக்களின் அடிப்படை வசதிகள் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செய்து கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதி வேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.