விவசாயிகளுக்கு இலவசமாக இயற்கை உரம் வழங்கப்படுவதாக அதிகாரி கூறியுள்ளார்.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் துப்புரவு பணியாளர்கள் மூலம் ராட்சச இயந்திரங்கள் கொண்டு கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது. எங்களது மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் யாருக்கும் இல்லை. ஆனால் குளிர் காலத்தில் தான் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. வடகிழக்கு பருவ மழை பெய்யும் பொழுது ஜீரம் தென்படும்.
இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் பெய்த கனமழையால் பாதாள சாக்கடைக்குள் மழை நீர் புகுந்துள்ளது. அதில் பொதுமக்கள் துணி, குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது உடனடியாக சரி செய்யப்படும். மேலும் மாவட்டம் முழுவதிலும் இருந்து தினம்தோறும் 20 முதல் 50 கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது கொரோனா RT-PCR பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன் முடிவுகள் நான்கு மணி நேரத்திலேயே வந்து விடுகிறது. ஆனால் தற்போது கொரோனா தொற்று தீவிரம் இல்லை. ஆனாலும் கூட கொரோனா அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு 2 அல்லது 3 நாட்களில் குணமடைந்து விடுகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் தினம் தோறும் 70 டன் காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் பெறப்படுகிறது. இவைகளை வைத்து சுமார் 7 அல்லது 8 டன் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. தயாரிக்கப்பட்ட உரங்களை நாங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குகிறோம். அவர்கள் நேரடியாக உடன் உரம் தயாரிக்கும் இடங்களுக்கு வாகனத்தை கொண்டு வந்து வாங்கி செல்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.