புனேவில் உள்ள கல்த்கர் என்ற கிராமத்தில் வசித்து வரும் ரமேஷ் என்பவர் பிஎஸ்சி ஃபாரஸ்ட்ரி பட்டப்படிப்பு முடித்ததும் அரசின் சுற்றுலாத் துறையிலும், ஆயுர்வேத நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்துள்ளார். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ரமேஷ் 3 வருடங்களுக்கு முன்பு வேப்பமரத் தயாரிப்புகளில் ஆர்வம் காட்டினார். மேலும் அக்ரி பிசினஸ் செண்டர், அக்ரி கிளினிக் ஆகியவற்றில் தொடர்ந்து பயிற்சி பெற்றார். அதோடு மட்டுமில்லாமல் வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் நிறுவனத்தையும் ரமேஷ் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் ரூ.48 லட்சம் முதலீடு செய்து வேப்ப புண்ணாக்கு, வேப்ப எண்ணெய் போன்றவற்றை தயார் செய்யும் தொழிற்சாலை ஒன்றை தொடங்கினார். இதன் மூலம் ரமேஷுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முதலில் 500 லிட்டர் வேப்ப எண்ணெயும், 300 MT வேப்பம் புண்ணாக்கும் தயாரித்துள்ளார். இதன் மூலம் ரமேஷுக்கு ரூ.22 லட்சம் லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று 21 ஆர்கானிக் தயாரிப்புகளை விற்பனை செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இவருடைய நிறுவனத்தின் ஆண்டு டர்ன்ஓவர் இன்று ரூ.2 கோடி ஆகும்.
இவரை போலவே மத்திய பிரதேசத்தில் உள்ள குஜாரி என்ற கிராமத்தில் வசித்து வரும் அபிஷேக் கார்க் என்ற இளைஞரும் தொழிற்சாலை ஒன்றை அமைத்துள்ளார். இந்த தொழிற்சாலையில் இவர் உற்பத்தி செய்யும் வேப்பம் புண்ணாக்கும், வேப்ப எண்ணெயும் பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இவரது தொழிற்சாலையில் வருடத்திற்கு 700 டன் வேப்பம் பொடியும், 50 டன் வேப்ப எண்ணெயும் தயாரிக்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இவர் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும் வழங்கி வருகிறார்.