கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின். வருகிற வழியெல்லாம் சாலையின் இரு புறத்திலும் மக்கள், தாய்மார்கள், பெரியோர்கள், நண்பர்கள், தொழிலாள தோழர்கள் மிகுந்த ஆர்வத்தோடு என்னை வரவேற்ற காட்சி, அதை எல்லாம் முடித்துவிட்டு குறித்த நேரத்திற்கு இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல்… கொஞ்சம் லேட்டா…. லேட்டா வந்தாலும், லேட்டஸ்டாக வந்திருக்கிறேன் அப்டியென்று ஒரு பழமொழி உண்டு.
அந்த நிலையிலே இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும், நிதி உதவிகளை செய்திடவும், நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை நடத்திட வேண்டும் என்று முடிவு செய்து, கடந்த 22ஆம் தேதி காலையில் நான் கோவைக்கு வர வேண்டும் என்று நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் என்னிடம் தேதி கேட்டார். நானும் ஒத்துக்கொண்டேன்.
அவர் நிகழ்ச்சியை தான் நடத்தப் போகிறார் என்று சொன்னார், ஆனால் இன்றைக்கு நடப்பது நிகழ்ச்சி அல்ல. ஒரு மாநாடு நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையிலே இது அமைந்திருக்கிறது. அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், அவருக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். அவர் சாதாரணமாக நிகழ்ச்சி என்று சொன்னாலே அது மாநாடு தான்.
ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் இங்கு வழங்கப்பட இருக்கிறது. கோடிக்கணக்கானவர்கள் பயன்படக்கூடிய வகையில் திட்டங்கள் தொடங்கி வைக்கிறோம் என்று சொன்னாலும், ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியிலே நான் பங்கேற்பதில் எனக்கு மகிழ்ச்சி அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் இதை ஏற்பாடு செய்து, முழு வெற்றி கண்டிருக்கக்கூடிய செந்தில் பாலாஜி அவர்களை…. அதேபோல் அவருக்கு துணையாக இருக்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளை… அரசு அலுவலர்களை…. நான் மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் என பாராட்டினார்.