தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நம்பியாறு அணை நிரம்பியதால் அதன் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்கிறது. இடதுபுறம் கால்வாய் மூலமாக பாசன வசதி பெறும் ஆயன்குளம் படுகைக்கு தண்ணீர் வந்து நிரம்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தண்ணீரானது ஆனைகுடி படுக்கைக்கும், அதன் அருகில் உள்ள இரண்டு கிணறுகளுக்குள்ளும் பாய்கிறது. வெள்ளப்பெருக்கு காலங்களில் இந்த கிணறுகள் பல மாதங்கள் தண்ணீர் தொடர்ந்து சென்றாலும் நிரம்பியதில்லை. இந்த கிணறுகளுக்கு தண்ணீர் செல்வதன் மூலம் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும். எவ்வளவு தண்ணீர் சென்றாலும் நிரம்பாத அந்த அதிசய கிணறுகளை அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இதையடுத்து சபாநாயகர் அப்பாவும் அந்தக் கிணற்றுக்குச் சென்று பார்வையிட்டார். இப்படி ஒரு அதிசய கிணறு இதுவரை கண்டதில்லை என்று பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.