தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பள்ளிகளில் பாலியல் தொடர்பாக புகார் பெட்டிகள் வைக்கும் நடைமுறை தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021- 2022 ஆம் கல்வி ஆண்டு மாணவர்களின் ஆரோக்கிய நலனுக்காக 37 ஆயிரத்து 321 அரசு பள்ளிகளிலும் தலா 2000 வீதம் 7.47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட வேண்டும்.
அந்த குழுவின் சார்பில் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதேபோல பள்ளிகளில் மாணவர் மனசு என்ற பாதுகாப்பு பேட்டி வைக்கப்பட வேண்டும். அந்த பெட்டியை 15 நாட்களுக்கு ஒருமுறை திறந்து அதிலிருந்த புகார்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி வளாகங்களில் விழிப்புணர்வு பலகைகளும் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.