இந்திய பாடகியான அருணா அவர்களுக்கு பிரான்ஸ் உயரிய விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுக்காக இந்திய நாட்டை சேர்ந்த கர்நாடகா இசை பாடகியான அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கர்நாடக இசை பாடகி, இசையமைப்பாளர், மனிதநேயர் மற்றும் பேச்சாளர் என பன்முகத் திறமை கொண்டவராவார். இந்த விருதானது அவர் சார்ந்த துறைக்காக மட்டுமல்ல இந்தோ பிரான்ஸ் உறவுகள் மேம்படுவதில் அவரது பங்களிப்பிற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதரான டால்போர்ட் பெரி கூறியதாவது, ” உங்கள் துறை சார்ந்த திறமை, பிரான்ஸ் மற்றும் சர்வதேச கலைத்துறைக்கு நீங்கள் அளித்துள்ள பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரிப்பதற்கு அடையாளமாகவே எங்கள் நாடு இந்த விருதை உங்களுக்கு வழங்குகின்றது. மேலும் கர்நாடக சங்கீதத்தில் அழகையும், நுணுக்கத்தையும் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் கொண்டு செல்கின்றீர்கள். இந்த விருதானது பிரான்ஸுடன் நீங்கள் எப்போதும் கொண்டிருக்கும் நட்புறவை அடிகோடிட்டு காட்டுவதற்காக வழங்கப்படுகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.