முன்பாக ஒரு கால் இல்லாதவர்கள் எடை அதிகமான செயற்கைக்கால் பொருத்தி நடக்கவேண்டி இருந்தது. அதன் அதீத எடை நடப்பவர்க்கு சிரமத்தை கொடுத்தது. அதற்கு நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இஸ்ரோவில் பணிபுரிந்தபோது ராக்கெட் தயாரிக்கும் மெல்லிய வலுவான இலகுரக புரோஸ்டெடிக்ஸ் பயன்படுத்தி இலகுரக செயற்கைக் கால்களை உருவாக்கினார். இன்றுவரை அந்த கால்கள் தான் பல பேருக்கும் பெரிய துணைவனாக நின்று அந்த மக்களையும் நிற்கவைக்கிறது. தற்போது அதன் வளர்ச்சியாக நுண்செயலி பயன்படுத்தும் செயற்கை கால்களை இஸ்ரோவானது தயாரித்து இருக்கிறது.
புதியதாக அறிவிக்கப்பட்ட தொழில்நுட்பமான நுண் செயலி கட்டுப்படுத்தப்பட்ட முழங்கால்கள் (MPKs) என அழைக்கப்படுகிறது. இது நுண்செயலிகளைப் பயன்படுத்தாத செயலற்ற மூட்டுகளால் வழங்கப்படும் திறன்களைவிட, ஊனமுற்றோருக்கு அதிக திறன்களை வழங்குகிறது. ஏறக்குறைய 1.6 கிலோ கிராம் எடை உடைய இந்த இயந்திரம் நடக்க சிரமப்படும் ஒருவருக்கு குறைந்தபட்ச ஆதரவுடன் சுமார் 100 மீட்டர் தூரம் நடக்க உதவுகிறது. ஸ்மார்ட் MPK-கள் இஸ்ரோவின் கிளை நிறுவனமான விக்ரம் சாராபாய் விண்வெளிமையம் (VSSC), இஸ்ரோவால் லோகோமோட்டர் குறைபாடுகளுக்கான தேசிய நிறுவனம் (NILD), மாற்றுத்திறனாளிகளுக்கான தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனம் மற்றும் இந்தியாவின் செயற்கை மூட்டு உற்பத்திக் கழகம் (ALIMCO) போன்றவற்றுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்படுகிறது.
நுண் செயலி, ஹைட்ராலிக் டம்பர், லோட் மற்றும் முழங்கால் கோண உணரிகள், கூட்டு முழங்கால்-கேஸ், லி-அயன் பேட்டரி, மற்றும் இடைமுக கூறுகள் போன்றவற்றை ஸ்மார்ட் மூட்டுகள் கொண்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இது சென்சார் தரவின்படி நடையின் நிலையைக் கண்டறியும். கட்டுப்பாட்டு மென் பொருள் கணினியின் விறைப்பை மாற்றுவதன் வாயிலாக விரும்பிய நடையை அடைவதற்குத் தேவையான நிகழ் நேரத் தணிப்பை இந்த இயந்திரம் மதிப்பிடுகிறது. இப்போது கிடைக்கும் செயற்கை மூட்டுகளின் விலையானது ரூபாய்.10-60 லட்சமாக இருக்கிறது. புது தொழில்நுட்ப இயந்திரத்தின் விலை, அதில் பத்தில் ஒரு பங்கு. அதாவது சுமார் ரூபாய்.4-5 லட்சம் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.