சிறுவயதில் இருந்தே தொழிலாளிக்கு நிறைவேறாத ஆசையை அவரது மகன்கள் நிறைவேற்றி வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜம்படை கிராமத்தில் விவசாயக் கூலி தொழிலாளியான ஏழுமலை(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வேடியப்பன்(22), மணி(20) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஏழுமலை ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இதனால் ஏழுமலையின் பெற்றோர் அவருக்கு மொட்டை அடித்து காது குத்தாமல் இருந்துள்ளனர்.
இதனை ஏழுமலை தனது மகன்கள் மற்றும் உறவினர்களிடம் கூறி வேதனைப்பட்டார். இதனால் வேடியப்பனும், மணியும் தங்களது தந்தையை குலதெய்வ கோவிலுக்கு அழைத்து சென்று உறவினர்கள் முன்னிலையில் தாய்மாமா மடியில் அமர வைத்து மொட்டை அடித்து காது குத்தியுள்ளனர். இதில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.