சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகிய நீங்கள் உங்களுக்கு அடுத்து வரும் தலைமுறைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது கௌரவம் மட்டுமல்ல. அது அடிப்படை உரிமை. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு இன்னொரு சிறப்பு என்னவென்று கேட்டீங்கன்னா, மாற்றுத்திறனாளிகளை பெண்கள் 4 பேரும் இன்று பதக்கம் பெறுகிறார்கள் என்பதுதான் மிகபெரிய சிறப்பு.
கழக ஆட்சியில் அமைந்த காலத்தில் எல்லாம் பெண்கள் முன்னேற்றத்திற்கான ஏராளமான திட்டங்களை தீட்டி இருக்கிறது, இப்போது தீட்டியும் வருகிறது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டு வந்தது கலைஞர் தலைமையில் இருந்த திமுக அரசு. அரசு பணியிடங்களில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு, அதை உருவாக்கி தந்தவர் தலைவர் கலைஞர். இப்போது அது 40%. போற போக்கில் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கும் நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம், இப்போது 50 சதவீதம். மகளிர் சுய உதவி குழு அமைத்தது கழக அரசு தான். மகளிர் தொழில் முனைவோர் உதவி திட்டம் கொண்டு வந்தோம். இப்படி பெரிய பட்டியலை நான் அடுக்கி கொண்டே இருக்க முடியும். அந்த வரிசையில் தான் மகளிர்க்கு கட்டணம் இல்லா பேருந்து பயணத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். ஏதோ வெறும் கட்டண சலுகை என்று நீங்கள் நினைத்து விட வேண்டாம். பெண்களுக்கான பொருளாதார தன்னிறைவுக்கு அடித்தளம் அமைக்கக்கூடிய திட்டம்தான் இந்த திட்டம்.
இதன் மூலம் ஏராளமான பெண்கள் கல்வி கற்கவும், வேலைகளுக்காகவும், சிறு தொழில் நிறுவனங்கள் உருவாக்கவும் வெளியில் வர தொடங்கி இருக்கிறார்கள். எனது கனவு திட்டங்களில் ஒன்றான புதுமைப்பெண், உயர்கல்வி உறுதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் இந்த ஆண்டு ராணி மேரி கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் பயிலக்கூடிய 1,039 மாணவிகள் இதனால் பயன்பெற்று இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் மிகப்பெரிய பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.