டெல்லியில் கல்லூரி மாணவனை துப்பாக்கி முனையில் கடத்தி பணம் பறித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.
தெற்கு டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அங்குள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த மாணவருடன் 3 பேர் நட்பாக பழகியுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி அன்று அந்த மாணவர்களிடம் நாசுக்காக பேசி அந்த நபர்கள் மாணவனை கடத்தி அறைக்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்தனர்.
மேலும் கஞ்சா, கைத்துப்பாக்கி போன்றவை அந்த மாணவனிடம் இருப்பது போன்ற வீடியோ எடுத்து ரூ 20 லட்சம் கேட்டு அந்த மாணவரின் பெற்றோருக்கு வீடியோவை காண்பித்தனர். அந்த மாணவனை பொய் வழக்கில் சிக்க வைத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். மேலும் அந்த வீடியோவை மாணவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளனர். இதனால் அந்த மாணவனின் பெற்றோர் ரூ 5 லட்சம் கொடுத்துள்ளனர்.
பிப்ரவரி 1ஆம் தேதி அன்று பணம் கொடுக்காவிட்டால் அந்த மாணவனையும் அவரது பெற்றோர்களையும் கொலை செய்துவிடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த மாணவனின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். அங்குள்ள போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மாணவணை மீண்டும் மிரட்டியதாக தெரிய வருகிறது.
இதனால் மனமுடைந்த மாணவர் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது மாணவரை கண்டுபிடித்த அவரது பெற்றோர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கைது செய்தது. மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறார்கள். மாணவனை மிரட்டியதற்காக கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்துள்ளார்.