ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காடனேரி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மாத ஆரம்பம் முதலே மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் தென்மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக விருதுநகர மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கனமழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் இரண்டாவது முறை மழைநீர் கோவிலுக்குள் புகுந்து உள்ளது. இந்நிலையில் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் காடனேரி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது சிறுமி உடல் நசுங்கி பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.