கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறையினருக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் குளேஸ்வரன் பட்டி அமைதி நகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் அமைதி நகர் பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 21 மூட்டைகளில் 50 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீஸ் 1050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை சேர்ந்த டிரைவர் அஜித் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரேஷன் அரிசி அதிக விலைக்கு விற்க கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதாக தெரியவந்தது. மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.