மத்திய பிரதேசத்தில் பெருந்தொற்று நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சாரி கிராமத்தில் உள்ள இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்காக மருத்துவ குழுவினர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது பெருந்தொற்று நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவ குழுவினரை தாக்கி சிறைபிடித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் மீதும் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் பெருந்தொற்று நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும் மருத்துவ குழுவினர் மற்றும் போலீசாரை தாக்கியதாக பெருந்தொற்று நோயாளி குடும்பத்தினர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முன்னதாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் முகக்கவசம் அணியாத ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கடுமையாக தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.