சமூகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் திருட்டு, கொள்ளை ஆகிய பல்வேறு குற்ற சம்பவங்கள் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் விலைவாசி அதிகரிப்பும், வேலையில்லா திண்டாட்டமும் தான் காரணமாக கருதப்படுகிறது. தற்போது ஏடிஎம் இயந்திரத்தை புல்டோசர் மூலம் கொள்ளையர்கள் அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் சாங்க்லீ பகுதியிலுள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் நேற்று ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் ஜேசிபி வாகனத்தை கொண்டு வந்து, ஏடிஎம் மையத்தின் சுவற்றில் பொருத்தப்பட்டு இருக்கும் இயந்திரத்தை மட்டும் லாவகமாக தகர்த்து எடுத்து சென்றுள்ளனர். ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சி தெளிவாக பதிவாகி இருக்கிறது. இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.