மதுரை மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த நண்பனின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸின் மீது ஏறி நின்று போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டும், நெடுஞ்சாலையில் நின்ற வாகனங்களை மறித்து பைக்குகளில் வீலிங் செய்தும், இளைஞர்கள் அட்டகாசம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த இளைஞர்கள் இவ்வாறு ஆடிக்கொண்டு செல்லும் ஆம்புலன்சுக்குள் அவர்களது நண்பனின் சடலம் உள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் இவர்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அபி கண்ணன். இவர் தனியார் சட்டக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். திங்கட்கிழமை அன்று கல்லூரி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வரும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்தநிலையில், இவருடைய உடல் மருத்துவமனையில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தனக்கன்குளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த நண்பர்கள் ஆம்புலன்சுக்கு முன்னால் ஊர்வலமாக சென்றனர்.
மேலும் ஆம்புலன்சில் மேற்கூரையில் ஏறி நின்றும், ஆம்புலன்சில் பக்கவாட்டு ஜன்னலில் தொற்றிக் கொண்டும், விசில் அடித்துக் கொண்டும், கூச்சலிட்டவாரே சென்றுள்ளனர். அந்த கும்பலில் சிலர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களை கொண்டு வீலிங் செய்தவாறும், போலீசார் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை தூக்கி வீசி சேதப்படுத்தியவாறும் சென்றதாக சொல்லப்படுகிறது. இவர்களது அலப்பறைக்கு ஆம்புலன்சுக்கு பின்னால் வந்த வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. தன் நண்பன் உயிரிழந்ததை கூட பொருட்படுத்தாமல் மது அருந்திவிட்டு போதையில் இருக்கின்றனர் இளைஞர்கள். மதுவோடு தற்போது கஞ்சாவும் சேர்ந்துகொண்டு இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக வேதனை தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், போதை பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.