சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி சிவராமன் நகரில் பர்குணன் ( 70 ) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள் ( 65 ) என்ற மனைவி உள்ளார். இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சின்னம்மாளிடம் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் கியாஸ் புத்தகத்தில் பதிவு செய்வதாக கூறியுள்ளார். இதையடுத்து சின்னம்மாள் கியாஸ் புத்தகம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அந்த வாலிபர் திடீரென்று சின்னம்மாளை கீழே தள்ளிவிட்டு அவருடைய கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து புழுதிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.