விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மணப்பாடு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் வடிவழகன்- துளசி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி துளசி தன்னுடைய இரண்டு வயது குழந்தையை கணவர் இல்லாத நேரத்தில் கொடூரமாக தாக்கி அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய மொபைலில் எடுத்து வைத்துள்ளார்.
இதையடுத்து காயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். அப்போது அவருடைய கணவர் வடிவழகன் துளசியின் செல்போனை பார்த்தபோது அதில் குழந்தையைத் தாக்கும் வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து வடிவழகன் இந்த வீடியோவை தன்னுடைய செல்போனுக்கு அனுப்பி விட்டு, குழந்தைகளை தன்னிடம் வைத்துக்கொண்டு துளசியை அவருடைய தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
இந்நிலையில் இந்த வீடியோவானது நேற்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற குழந்தையை தாயே கொடூரமாக தாக்கும் இந்த வீடியோ வெளியானதையடுத்து துளசி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.