Categories
தேசிய செய்திகள்

“அடம்பிடித்த குழந்தை” அவசரத்தில் சாக்லேட் சாப்பிட்டு உயிரிழப்பு…. கதறும் தாய்….!!

6 வயது சிறுமி சாக்லேட் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் பைந்தூர் அருகே பிஜூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சமன்வி என்ற 6 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த மாணவி விவேகானந்தா ஆங்கில வழி பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று சிறுமி பள்ளிக்கு செல்ல விரும்பாததால் சிறுமியின் தாய் சுப்ரீதா பூஜாரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் சிறுமியை சமாதானப்படுத்தி பள்ளிக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இந்நிலையில் சிறுமி பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறி அடம்பிடித்ததால், அவருடைய தாயார் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்துள்ளார். அப்போது பள்ளி பேருந்து வந்ததால் சிறுமி சாக்லேட் கவரை பிரிக்காமல் அப்படியே வாயில் போட்டு சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து பள்ளி பேருந்து வந்தவுடன் சிறுமி பேருந்தில் ஏறுவதற்காக ஓடிய போது சாக்லேட்டை கவருடன் விழுங்கி விட்டார்.

இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பேருந்து படிக்கட்டிலேயே சிறுமி மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் டிரைவர் உடனடியாக சிறுமியை மீட்டு அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். அதன்பிறகு சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிறுமி மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், விவேகானந்தா பள்ளிக்கு அன்று விடுமுறை விடப்பட்டது.

Categories

Tech |