திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குப் பின் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவனே மனைவியை கொன்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ஜாகீர்உசேன் நகரைச் சேர்ந்தவர் சண்முகராஜ். இவருக்கு வயது 33. கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முருகவள்ளி (28). இவர்களுக்கு தமிழ்செல்வன் (6), ரபிஷியா (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சண்முகராஜூம், முருகவள்ளியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இதற்கு முன் சண்முகராஜ் தூத்துக்குடி இந்திரா நகரில் தங்கி உள்ளார். அப்போது விளாத்திகுளம் அருகே உள்ள நரிப்பையூருக்கு கட்டிட வேலைக்கு சென்றபோது, அந்த பகுதியை சேர்ந்த முருகவள்ளியுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன்பின் தூத்துக்குடி ஜாகீர்உசேன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
முருகவள்ளி அடிக்கடி செல்போனில் பேசியதாகவும், இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு சண்முகராஜ் சத்தம் போட்டதாகவும், இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 27ஆம் தேதி இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலையில் நீண்ட நேரமாகியும் முருகவள்ளி வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு முருகவள்ளி நைலான் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தாளமுத்துநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை பிரிவு மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார், முருகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சண்முகராஜ் நடத்தையில் சந்தேகப்பட்டு முருகவள்ளியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததும், பின்னர் அவர் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதனையடுத்து சண்முகராஜை போலீசார் கைது செய்தனர். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு காதல் மனைவியை கணவரே கொலை செய்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.