தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு தமிழக அரசுக்கு அறிவிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 27-ஆம் தேதி சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் ரூ.1,264 கோடி மதிப்பில் அமைய உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் ஆரம்பகட்ட பணிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே மத்திய அரசு 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. நேற்றுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி மூன்று வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் மத்திய அரசு 45 மாதங்களில் பணிகள் முடிவுக்கு வந்தவுடன் மதுரை எய்ம்ஸ் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தது. ஆனால் தற்போது 36 மாதங்களாகியும் இன்னும் முதல்கட்ட பணிகள் கூட நடைபெறவில்லை.