சீன நாட்டில் தன் பெயரை சொல்ல விரும்பாத ஒருநபர் ரூபாய்.1,815க்கு (இந்திய மதிப்பு) சென்ற 20ம் தேதி லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கி இருக்கிறார். இதையடுத்து அதிர்ஷ்டவசமாக அவரின் லாட்டரிச் சீட்டுக்கு ரூபாய். 248.48 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. அதன்பின் லாட்டரி நிறுவனத்திற்கு கார்ட்டூன் உடை அணிந்து சென்ற அந்த நபர் தன் பரிசுத்தொகையை பெற்றுக் கொண்டதுடன், ரூபாய்.56 லட்சத்தை சமூக உதவி குழுக்களுக்கு நன்கொடை அளிப்பதாகவும் அறிவித்தார். இந்நிகழ்வில் கார்டூன் உடை அணிந்து வந்தது தொடர்பாக கேட்டதற்கு அவர் கூறிய பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
அந்நபர் கூறியதாவது “இந்த பரிசுத்தொகை விழுந்தது பற்றி என் மனைவி மற்றும் குழந்தையிடம் நான்கூறவில்லை. ஏனெனில் பிறரை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்க் வந்து விட்டால், எதிர் காலத்தில் கடின உழைப்பை செய்யமாட்டார்கள் என்று எனக்கு அச்சம் எழுந்து உள்ளது. இந்த பரிசுத்தொகையை எந்த வகையில் செலவிட வேண்டும் என இதுவரையிலும் முடிவெடுக்கவில்லை. மெதுவாக செலவு செய்யவேண்டும் என திட்டமிட்டுள்ளேன்” என்று கூறினார். அத்துடன் பல வருடங்களாக லாட்டரி வாங்கும் பழக்கமுடைய அவர், 40 முறைக்கு மேல் சிறிய அளவிலான பரிசுத்தொகை வென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.