கோவில் நிர்வாகி திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் காமராஜர் தெருவில் விவசாயியான வெங்கடேஷ் ராஜா(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் நிர்வாக கமிட்டி துணை செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கோவிலுக்கு சென்ற ராஜாவுடன் சமீபத்தில் விழா நடத்தியது தொடர்பாக மற்றொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டிற்கு திரும்பினார். சிறிது நேரத்தில் ராஜா திடீரென இறந்ததால் அதிர்ச்சியடைந்த அவரது மகன் தினேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் ராஜா கோவிலில் நடந்த தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது உடல் நலக் குறைவால் இறந்தாரா என்பது தெரியவரும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.