ஆயுதப்படை போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் ராஜீவ்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுதப்படை பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நிர்மலாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜீவ்பாண்டி நிர்மலா தேவியின் மீது சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிர்மலா தேவியின் பெற்றோர் தனது மகன் மதன்குமாரை அக்கா வீட்டில் தங்குமாறு கூறியுள்ளனர். இதனால் மதன்குமார் நிர்மலாதேவியின் வீட்டில் தங்கியுள்ளார்.
அப்போதும் ராஜீவ்பாண்டி நிர்மலா தேவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நிர்மலா தேவி தனது பெற்றோருடன் இணைந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ராஜீவ்காந்தி தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த மாமியார் சரோஜாவையும், மாமனார் நடராஜனையும் அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜீவ்பாண்டியை கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த ராஜீவ்பாண்டி விஷம் குடித்துவிட்டு ஆயுதப்படை போலீஸ் மைதானத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். அப்போது மைதானத்திலேயே அவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனை பார்த்த போலீசார் ராஜீவ்பாண்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜீவ்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.