நாட்டு துப்பாக்கியுடன் வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் காவல்துறையினர் 2 பேரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் மோகன் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் ஒரு நாட்டு துப்பாக்கி இருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தர்மலிங்கம் மற்றும் மோகன் ஆகிய இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த நாட்டுத்துப்பாக்கி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய மற்ற இரண்டு பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.