கைது செய்யப்பட்ட வாலிபரை விடுவிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொழுப்பேடு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்து சில மாதங்களாக குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் சரியாக செய்யப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் துறை என்பவரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராம மக்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 15-ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த கிராம மக்கள் கூட்டம் நடத்த விடாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி சென்றனர்.
இதனையடுத்து மறுநாள் காவல்துறையினர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த பரசுராமன் என்பவர் சிலருடன் சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவரிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டுள்ளார். ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் தன்னை பரசுராமன் சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தியதாக கூறி செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு பரசுராமனை கைது செய்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் நேற்று பரசுராமனை விடுவிக்க வேண்டும் என கூறி செய்யாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறையினர் இதை சட்டப்படி தான் எதிர்கொள்ள வேண்டும். எனவே கலைந்து செல்லுங்கள் என எச்சரித்துள்ளனர். ஆனால் கிராம மக்கள் கலைந்து செல்லவில்லை. இதனையடுத்து காவல்துறையினர் கிராம மக்கள் அனைவரையும் வேனில் ஏற்ற முயன்றுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.