கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் ரெட்டி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவி தொகை, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, சாலை வசதி, மின் இணைப்பு மற்றும் வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட 191 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கொடுத்துள்ளனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது 3 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் தகுதி இல்லாத மனுக்கள் தொடர்ந்து வந்தால் அதற்கான உரிய விளக்கத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனித் துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா போன்ற துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையில் குருபரப்பள்ளி ஊராட்சி சிக்காரிமேட்டை பகுதியை சேர்ந்த நரிக்குறவ இன மக்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்து உள்ளனர். அதில், நாங்கள் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஆனால் 80 குடும்பங்களுக்கு மட்டுமே அரசு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது. இதில் ஒரு வீட்டில் 2 அல்லது 3 குடும்பங்கள் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம்.
அதிலும் சிலர் அந்த பகுதியில் தரையில் துணி கட்டி வீடுகளாக வாழ்ந்து வருகிறோம். மேலும் மின் இணைப்பு, சாக்கடை கால்வாய் மற்றும் குடும்ப அட்டை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இருளர் இன மக்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதனைப் போலவே எங்கள் பகுதியில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கும் புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்.
அது மட்டுமில்லாமல் அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும். மேலும் 60 பேருக்கு கொடுத்து வந்த உதவித்தொகையும் சரியாக வருவதில்லை. எங்கள் இனங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்டத்தில் 6 இடங்களில் வசித்து வருகிறோம். எனவே எங்கள் அனைவருக்கும் உடனடியாக அடிப்படை வசதிகள் மற்றும் தொகுப்பு வீடுகளை கட்டித் தரவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.