Categories
மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதியில்லை… புதிய கட்டிடம் வேண்டும்… SFI தலைமையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!!

மயிலாடுதுறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம்,  குத்தாலம் தாலுகா மாதிரிமங்கலம் ஊராட்சியில் உள்ள சிவராம புரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரிக்கு இடம் ஓதுக்கிடு செய்யவில்லை என்பதால்  மாதிரிமங்கலம் கிராம சேவை மைய கட்டிடத்தில் தற்போது கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரியில் போதுமான வகுப்பறைகள் இல்லாமலும், கழிப்பறை அடிப்படை வசதிகள் இல்லாமலும், போதிய ஆசிரியர்கள் இல்லாமலும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நிரந்தர வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் வகுப்புகளை புறக்கணித்து விட்டு இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் தலைமையில் மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் திருவாலங்காடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல் அறிந்த குத்தாலம் தாசில்தார் பிரான்சுவா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அரசு அனுமதியுடன் கல்லூரி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அடிப்படை வசதிகள் உள்ள கட்டிடத்திற்கு கல்லூரியை இடமாற்றம் செய்து தருவதாகவும் அதிகாரிகள் உறுதி கொடுத்தனர். இதை ஏற்றுக் கொண்டு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Categories

Tech |