பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டு முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கலைத்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய அரசியலுக்கு ஆளுநர்கள் உறுதுணையாக இருந்து, சட்ட நெறிகளை குழிதோண்டி புதைத்து வருவதாகவும், கிரண்பேடியை நீக்குவது போல ஒரு நாடகத்தை நடத்தி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கலைத்துள்ளதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலில் மக்களை சந்தித்து நம்பிக்கையை பெறுவதை கைவிட்டுவிட்டு, எம்எல்ஏக்களை கட்சி தாவ செய்து இந்த ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ள வைகோ, இதனை அடிமை அதிமுக கைகட்டி, வாய்பொத்தி சேவகம் செய்வதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.