தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு காவலரின் நலனிலும் கூடுதல் கவனமும், அக்கறையும் செலுத்தி வருகிறார். ஆரம்பகட்டத்தில் இருந்தே இவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு காவலர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி காவலர்களின் பணி இடம் மாறுதல், தண்டனை நீக்குதல் உட்பட பல விவகாரம் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்ட பின்பும், அந்த உத்தரவை சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு வழங்குவதில் சிலர் லஞ்சம் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு கையெழுத்து போட்டதை அடுத்து அந்தத் தகவல் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு தற்போது வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக இடையில் இருப்பவர்கள் லஞ்சம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் கூறுகின்றனர். இதில் போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை பல வருடங்களாக நீடித்து வந்த நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு இத்திட்டத்தை சமீபத்தில் நடைமுறைப்படுத்தினார்.
அதன்ப்பின் காவல்துறையில் குறைதீர்ப்பு முகாம்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சரக காவல் துணைத்தலைவர், மண்டலகாவல்துறை தலைவர் என 3 நிலைகளில் நடத்தப்பட்டது. இதன் மூலமாக 366 காவலர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டது. மேலும் 164 காவலர்களின் தண்டனையானது குறைக்கப்பட்டது. இதனிடையில் 51 காவலர்கள் பணிக்கு திரும்ப எடுக்கப்பட்டு உள்ளனர். 1,353 காவலர்களுக்கு அவர்கள் விருப்பத்தின்பேரில் சொந்தமாவட்டங்களுக்கு பணி இடமாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
காவல் துறையைச் சார்ந்தோர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் டிசம்பர் 22, 23ஆம் தேதிகளில் ‘காவல் குடும்ப வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதாவது சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூரில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், தனியார் வங்கிகள், நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இதில், 274 தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றது. 1,046 நபர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபுவின் இதுபோன்ற அதிரடியான நடவடிக்கைகளுக்கு காவல்துறையைச் சேர்த்தவர்கள் ராயல் சல்யூட் அடிக்கின்றனர்.