ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆங் சான் சூகி, மியான்மர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக அரசை கலைத்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
அதனைத் தொடர்ந்து மியான்மரின் தலைவரான ஆங் சான் சூகியை இராணுவம் கைது செய்து வீட்டுக்காவலில் சிறை வைத்துள்ளது. இதனையடுத்து இராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டி கொரோனா விதிகளை மீறியது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் ஆங் சான் சூகி கடந்த டிசம்பர் மாதம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டுகளில் மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் பின்னர் அந்த தண்டனை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி, தனது சக அரசியல் தலைவர் ஒருவரிடம் இருந்து தங்கம் மற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்க டாலர்களை லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் தனக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆங் சான் சூகி அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். ஆனால் அவரது மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.