கொல்கத்தாவில் உள்ள மண்டல ரயில்வே தலைமை அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் தலைமை அலுவலகம் ஒன்று உள்ளது. அந்தக் கட்டிடத்தின் 13-வது மாடியில் நேற்று மாலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு மளமளவென தீ அனைத்து அடுக்குகளுக்கும் பரவத் தொடங்கியது. இதனையடுத்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அவர்களில் 4 பேர் லிப்டில் மின் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களைத் தவிர மற்ற 5 பேர் தீயில் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் தீ விபத்தில் கட்டிடத்தில் இருந்த சிலரையும் காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட இடத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார். இதனையடுத்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து, நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.