3 வீடுகளில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்குத்து பாறை எஸ்டேட் பகுதியில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் பார்வதியம்மாள் என்பவரின் வீட்டு மேல் கூரையில் இருந்து புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர்.
ஆனால் இந்த தீவிபத்தில் பார்வதியம்மாள், சிவகாமி, ஜோதிவேல் ஆகிய தொழிலாளர்களின் வீடுகளில் இருந்த பள்ளி சான்றிதழ்கள், புத்தகங்கள், நகை, பணம் போன்ற அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து அறிந்த வால்பாறை தாசில்தார் குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.