விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் தங்கசாமி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கையர்க்கரசி(64) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்கசாமி தனது மனைவி உறவினர்களான பூஜா(30), ரஞ்சனா(20) பேரன் பிரதுன் ஆகியோருடன் காரில் நவல்பட்டு பகுதியில் இருக்கும் மருமகன் லட்சுமணன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதேபோல் திருச்சி சுந்தரம் பிள்ளை தெருவில் வசிக்கும் ராமகிருஷ்ணன்(65) என்பவர் அவரது மனைவி பத்மாவுடன்(60) காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்த காரை மோகன்(45) என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
இந்நிலையில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செவந்தம்பட்டி விலக்கு அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த தங்கசாமியின் கார் மையத் தடுப்பை தாண்டி எதிரே இருக்கும் சாலைக்கு சென்று மோகன் ஒட்டி வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த மற்றொரு காரும் விபத்துக்குள்ளான கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பூஜா, மங்கையர்க்கரசி, ரஞ்சனா ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.
இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பத்மாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பத்மா பரிதாபமாக இறந்து விட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த தங்கசாமி, பிரதுன், ராமகிருஷ்ணன், மோகன் ஆகியோர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ரஞ்சனாவும், பூஜாவும் ராஜபாளையம் பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். பத்மா உருமு தனலட்சுமி கல்லூரியில் சேர்மனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.