அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய “ஹவாசோங்-17” என்னும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. அதன் பின் எந்த ஒரு ஏவுகணை சோதனையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை நேற்று ஒரே நாளில் வடகொரியா சோதித்துள்ளது.
சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாகவும் அந்த ஏவுகணைகள் கொரிய தீபகற்கம் மற்றும் ஜப்பானுக்கு இடையே கடலில் விழுந்ததாகவும் தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து ஜப்பான் துணை ராணுவ மந்திரி தோஷிரோ கூறியதாவது, வடகொரியாவின் ஏவுகணைகள் 550 கிலோமீட்டர் உயரத்தில் 250 கிலோமீட்டர் தூரம் வரை பறந்ததாகவும் அவை ஜப்பானின் பிரத்தியோக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாகவும் தெரிகிறது.
மேலும் ஏவுகணைகளால் சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்த ஒரு தகவலும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கடந்த ஒரு மாத இடைவெளிக்கு பின் தற்போது வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.