தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி அடுத்த மாதம் 4 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகர தெரிவித்துள்ளார். அதன்படி தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இந்த நீதிமன்றத்தில் காசோலை தொடர்பான வழக்குகள், கல்விக்கடன், வங்கி கடன், மோட்டார் வாகன விபத்து, குடும்ப பிரச்சனை, பாகப்பிரிவினை, சொத்து, வாடகை போன்ற உரிமைகள் தொடர்பான வழக்குகள், வருமான வரி, விற்பனை வரி போன்ற வழக்குகளுக்கு விசாரித்து தீர்ப்பு காணப்படும், மேலும் மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக வழங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த நீதிமன்றத்தை பயன்படுத்தி நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணலாம் என கூறியுள்ளனர்.