அடுத்த வருடம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே தான் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு… அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்று கருத்து கூறியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்து முதல்வரை அறிவிப்போம் என்று அவர் தெரிவித்தார்.
அவரின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் என கருத்து தெரிவித்தார். இதையடுத்து மாறி மாறி அமைச்சர்கள் கருத்து தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசின் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இந்த நிலையில் தான் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஊரான தேனி மாவட்டத்தின் போடி பகுதியில் அடுத்த முதல்வர் பன்னீர்செல்வம் என்றும், தமிழகத்தின் நிரந்தர முதல்வர், அம்மா வழிகாட்டிய முதல்வர் பன்னீர்செல்வம் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதையடுத்து காலை முதல் தமிழக அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. இதை தொடர்ந்து பன்னீர்செல்வத்திடம் 10க்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இரண்டரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் தற்போது முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்த அமைச்சர்கள் விரைந்துள்ளனர். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று தெரிகின்றது.