ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள், ரெய்டுகள் பாய்ந்து வருகிறது. முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. அரசு வேலை வாங்கித் தருவது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பட்டியலில் அடுத்ததாக ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்களை அளித்ததாக தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் மிலானி என்பவர் எம்.பி., எம்.எல்.ஏ., க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
அதில், வேட்பு மனு தாக்கலின்போது இருவரும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளிட்ட குறித்து உண்மையை மறைத்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடி எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி எம்.பி.யான அவரது மகன் ரவீந்திரநாத் மீது குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறி, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்ய கடந்த 7ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.